‘காசி தமிழ் சங்கமம் 4.0’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வாரணாசி மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கலாசாரத்தை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழ் மொழியை கற்க ஆர்வம் கொண்ட 300 மாணவர்கள் வாரணாசியிலிருந்து தமிழகம் வந்துள்ளனர்.
கடந்த 20-ஆம் தேதி தமிழகம் வந்த இந்த மாணவர்களை, ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை இயக்குநர் காமகோடி மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்த 300 மாணவர்கள் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, புதுச்சேரி, காந்தி கிராமம், சாஸ்த்ரா, சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்கலைக்கழகம், கொங்குநாடு, சுதர்சன் ஜெயின் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ‘தமிழ் கற்கலாம்’ என்ற கருப்பொருளில், தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் மற்றும் கல்வி மரபுகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட 300 மாணவர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
பேராசிரியர்கள், ஹிந்தி மொழி வழியாக தமிழ் இலக்கணம், இலக்கியம் மற்றும் வட–தென் எல்லைகளின் கலாசார ஒற்றுமைகள் குறித்து கற்பிப்பதுடன், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் 31-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறவுள்ளது. நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
