தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்களால் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், சமீப காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் வன்முறை மற்றும் கொடூர சம்பவங்கள் மக்களிடையே கடும் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுராஜ் என்பவர் மீது, கடந்த 28ஆம் தேதி பாஜித் கான் மற்றும் பிரகாஷ் ஆகியோர் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் கடுமையாக காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் 30ஆம் தேதி உயிரிழந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் உள்ளிட்ட தொடர் வன்முறைகள், தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு நிலை எவ்வளவு மோசமடைந்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டாக உள்ளதாகவும், எனவே மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
