மதுரை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்திருந்த பிரதமர், புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதையடுத்து மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல பணிகளை துவக்கி வைத்தார்.
தமிழில் “வணக்கம்” என உரையைத் தொடங்கிய அவர், மதுரையின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்தார். தமிழக நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பில் மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் 9 வந்தே பாரத் மற்றும் 9 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும், அவற்றின் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் 9 நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சென்னை கடற்கரை–எழும்பூர் 4வது வழித்தடம் தினசரி பயணிகளுக்கு உதவியாக இருக்கும் எனவும், எதிர்காலத்தில் சென்னை–பெங்களூரு, சென்னை–ஐதராபாத் புல்லட் ரயில் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழக உள்கட்டமைப்புக்கான நிதி கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்ந்துள்ளதாகவும், 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க தமிழகத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
