சென்னை: தமிழக மக்களுடன் கடந்த 54 மாதங்கள் இணைந்து வாழ்ந்த நாட்கள் தமது வாழ்வின் பொற்காலமாக இருந்ததாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: கடந்த 54 மாதங்கள் தமிழக மக்களுடன் கலந்து பழகி, அவர்களின் அன்பை உணர்ந்து, தமிழின் பெருமையையும் தமிழ் மக்களின் பெருமிதத்தையும் அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாழ்க்கையின் ஓட்டத்தில் இப்போது உங்களைவிட்டு பிரியும் சூழல் வந்தாலும், உங்களுடன் கழித்த இந்த நாட்கள் என் வாழ்வின் பொற்காலமாக இருந்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த காலத்தில் உங்களோடும், உங்களின் வழியாக இந்த மண்ணின் மக்களோடும் வாழ்ந்தேன். மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் அன்பும் அரவணைப்பும் என்னை ஆழமாக பாதித்தது.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மரபிலும் நவீனத்திலும் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றபோது, கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் முழுமையாக நீங்கவில்லை. இருந்தபோதிலும் தமிழக மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னை மிகவும் நெகிழச் செய்தது. நான் எங்கு சென்றாலும் மக்களின் புன்னகை என்னை வரவேற்றது.
“கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்ற மகாகவியின் வரிகள் எவ்வளவு உண்மையானவை என்பதை இந்த காலத்தில் உணர்ந்தேன். தமிழகம் கல்வியிலும் அறிவிலும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.
சென்னை முதல் நெல்லை மற்றும் கன்னியாகுமரி வரை பல பகுதிகளுக்கும் சென்றேன். கிழக்கு கடற்கரை முதல் மேற்கு மலைப்பகுதி வரை பல கிராமங்களையும் நகரங்களையும் பார்வையிட்டேன்.
ஊர்களின் அமைப்பும் வழக்கங்களும் மாறுபட்டாலும், மக்களின் அன்பும் உழைப்பும் ஒரே மாதிரியாக இருந்தது. உழைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் அறிவின் முதிர்ச்சியும் எங்கும் காணப்பட்டது.
மாணவர்களின் உற்சாகத்தையும் சிரிப்பையும் மட்டுமல்லாமல், வயதானவர்களிடமும் அதே உற்சாகத்தை கண்டேன். உயர் தொழில்நுட்ப விவாதங்களில் காணப்படும் நுணுக்கத்தை கூட உழவுத் தொழிலில் காண முடிந்தது.
நான் சென்ற இடங்களிலும் சந்தித்த மக்களிடமும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகள் உண்மையாக வெளிப்பட்டதை உணர்ந்தேன்.
தமிழக இளைஞர்களும் மாணவர்களும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவை கூட திறமையாக கையாளும் திறன் அவர்களிடம் இருப்பதை பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் கண்டேன்.
இந்த அனுபவங்கள் அனைத்தும் தமிழக மக்கள் காட்டிய அன்பின் விளைவாகும். இந்த நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை என்று கவர்னர் ஆர்.என். ரவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
