தமிழக தேர்தல் பாஜ பொறுப்பாளர்கள் நியமனம்
புதுடில்லி:
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணை பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதத்தில் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு இன்னும் சுமார் மூன்றரை மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியை கட்சிகள் தொடங்கி உள்ளன.
இந்த சூழ்நிலையில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் மூவரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலும், இணை பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பியூஷ் கோயல்:
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பியூஷ் கோயல் பதவி வகித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், பாஜக தேசிய பொருளாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
அர்ஜுன் ராம் மேக்வால்:
மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் லோக்சபா தொகுதியைச் சேர்ந்த எம்பி ஆவார். 2013ம் ஆண்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான விருதைப் பெற்றுள்ளார். 2019 முதல் 2021ம் ஆண்டு வரை கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
முரளிதர் மோஹோல்:
மத்திய கூட்டுறவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக முரளிதர் மோஹோல் பதவி வகித்து வருகிறார். பாஜகவைச் சேர்ந்த இவர், 2024ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் புனே லோக்சபா தொகுதியில் முதல்முறையாக வெற்றி பெற்று எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்முறை எம்பியாக இருந்தபோதும், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் புனே மாநகர மேயராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
