தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட 3 சோழர் கால வெண்கல சிலைகள் இந்தியாவுக்கு மீட்பு
வாஷிங்டன்: தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த மூன்று வெண்கல சுவாமி சிலைகளை, மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சோழர் காலம் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த இந்த சிலைகள், திருடிச் செல்லப்பட்டு, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் ஆசிய கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வெண்கல சிலைகள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டவை என இந்தியா குற்றம்சாட்டியது.
இதையடுத்து, பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தின் புகைப்பட ஆவணக் காப்பக உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1956 முதல் 1959 வரையிலான காலகட்டத்தில் தமிழகக் கோவில்களில் இந்த சிலைகள் இருந்தது புகைப்பட ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், அந்த சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க ஸ்மித்சோனியன் ஆசிய கலை அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள டோரிஸ் வீனர் கேலரியிடமிருந்து சிவ நடராஜர் சிலையை அருங்காட்சியகம் வாங்கியிருந்தது. ஆனால், அந்த வாங்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஒப்படைக்கப்பட இருக்கும் சிலைகளின் விபரம்
சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 990 ஆம் ஆண்டின் சிவ நடராஜர் வெண்கல சிலை, தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள ஸ்ரீ பவ ஒளஷதீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்டது.
12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமாஸ்கந்தர் வெண்கல சிலை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா ஆலத்தூர் கிராமத்தில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பரவை நாச்சியாருடன் சுந்தரமூர்த்தி நாயனார் இருக்கும் வெண்கல சிலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்து திருடப்பட்டது.
இதில், சிவ நடராஜர் சிலையை நீண்டகால காட்சிக்காக அருங்காட்சியகத்தில் வைத்திருக்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சிலை, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இமயமலை கலைப் பிரிவுகளுக்கான கண்காட்சியில் இடம்பெற உள்ளது.
