புதுடில்லி: பல்வேறு மாநிலங்களில் கவர்னர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கேரளா மாநில கவர்னராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக கவர்னர் பதவியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில கவர்னராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் புதிய கவர்னரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி தற்போது மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கவர்னர் பதவியில் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்பும் வகையில், கேரளா மாநில கவர்னராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக கவர்னர் பதவியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், பல மாநிலங்களில் கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லடாக் துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா, டெல்லி துணை நிலை கவர்னராக தரன்ஜித் சந்து, தெலுங்கானா மாநில கவர்னராக சிவ் பிரதாப் சுக்லா, மகாராஷ்டிரா மாநில கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மா, நாகாலாந்து மாநில கவர்னராக நந்த் கிஷோர் யாதவ், பீஹார் மாநில கவர்னராக சையத் அடா ஹஸ்னன் மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநில கவர்னராக கவிந்தர் குப்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
