தமிழக கடன் நிலை உ.பி.யை விட அதிகம்; காங்கிரஸ் தலைவர் கருத்தால் பரபரப்பு
புதுடில்லி:
உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாகியுள்ளதாகவும், கடன் தொகை அதிகரித்துள்ளதாகவும் காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நிருபர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “அதிமுக ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல் கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது; தற்போது திமுக, தமிழகத்தை முன்னேறிய மற்றும் வளர்ந்த மாநிலமாக மாற்றியுள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்த கருத்தை மேற்கோள் காட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட பிரவீன் சக்கரவர்த்தி, அனைத்து மாநிலங்களிலும் அதிக கடன் நிலுவை உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதாக கூறியுள்ளார். 2010-ம் ஆண்டில், உத்தரபிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனில் இருந்ததாகவும், தற்போது உ.பி.யை விட தமிழகத்துக்கே அதிக கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வட்டிச் சுமையின் சதவீதத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்குப் பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், தமிழகத்தின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இரண்டும் கொரோனா காலத்துக்கு முந்தைய நிலைகளை விட தற்போது அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தி, ஏற்கனவே தவெக தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்து பேச்சு நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியிலும் இரு கட்சிகளும் உள்ளன. இத்தகைய சூழலில், நடிகர் விஜய்யுடன், அதுவும் ராகுலுக்கு நெருக்கமானவர் என கருதப்படும் பிரவீன் பேச்சு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு, திமுகவினரை சீண்டும் வகையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
