சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1ம் தேதி மதுரைக்கும், மார்ச் 6ம் தேதி வேலூருக்கும் வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியின் தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த ஜனவரி 23ம் தேதி நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி பங்கேற்று பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
அடுத்த கட்டமாக, மார்ச் 1ம் தேதி மதுரை நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மார்ச் 6ம் தேதி வேலூர் நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார்.
இதுகுறித்து பா.ஜ. வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அதிக நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஜனவரி 23ம் தேதியையடுத்து, மார்ச் 1 மற்றும் 6ம் தேதிகளில் வருகை உறுதியாகியுள்ளது. தேர்தல் நெருக்கத்தில் கன்னியாகுமரி, சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
