சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் வேகமெடுத்து வரும் நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தமிழகம் வர உள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் தேதிகள் எந்நேரத்திலும் அறிவிக்கப்படும் சூழல் நிலவி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை வருகிறார் என கூறப்படுகிறது.
தமிழகம் வரும் அவர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக தயார்நிலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்த ஆலோசனைக்குப் பின்னர், தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
