புதுடில்லி: தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் எட்டு பேருக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தில் 2024ல் நடந்த மாணவர் போராட்டத்திற்குப் பிறகு, இருநாடுகளுக்கிடையிலான சூழல் பதற்றமடைந்தது. இதற்கிடையே, பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாதக் குழுக்கள் வங்கதேசம் வழியாக இந்தியாவில் தாக்குதல் திட்டமிட்டதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, போலி ஆவணங்களுடன் வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக டில்லி போலீசார், தமிழக மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு அறிவுறுத்தல் அனுப்பினர்.
அதன்படி, திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் சோதனை மேற்கொண்ட போலீசார், உரிய ஆவணங்களின்றி தங்கி பணியாற்றிய 103 பேரை கைது செய்தனர். இவர்களில் மிஜனுார் ரகுமான் (33), முகமது ஷபாத் (35), உமர் (32), முகமது லிட்டன் (40), முகமது ஜாகீத் (40), முகமது உஜால் (29) ஆகிய ஆறு பேருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
டில்லியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும், திருப்பூரில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் தொடர்பு இருப்பதை டில்லி போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, தமிழக போலீசார் கைதானவர்களை டில்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைதானவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், ஏராளமான சிம் கார்டுகள் மற்றும் போலியான இந்திய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், மேற்கு வங்கத்திலும் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கைதான எட்டு பேரும் நேரடியாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ பாகிஸ்தான் சார்ந்த அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல் சதி தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
