தமிழகத்தை கஞ்சா போதையில் தள்ளாட வைத்ததே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை – சீமான்
சென்னை: கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதே தனது முக்கிய “சாதனை” என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் கஞ்சா போதையில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், இருவரை அடித்துக் கொன்ற கொடூர சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள், சென்னை வேளச்சேரியில் உணவு விநியோகப் பணியில் ஈடுபட்ட இளைஞரை மூன்று பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல் அரிவாளால் வெட்டும் காணொளி வெளியாகி, சமூகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள், நாம் நாகரிக சமுதாயத்தில் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தையே எழுப்பும் அளவிற்கு, திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தினமும் கிலோ கணக்கில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசே மதுபானங்களை விற்பனை செய்து குடும்பங்களை சீரழித்த நிலையில், அதற்கு மேலாக போதைப்பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தத் தவறியதால், வளரிளம் தலைமுறையின் எதிர்காலத்தையே திமுக அரசு அழித்து வருவதாகவும் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயன்பாட்டின் விளைவாக கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் அதிகரித்து, தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், போதைப்பொருள் புழக்கத்தால் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெறும் அளவிற்கு மோசமான நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல லட்சம் கிலோ போதைப்பொருள் விற்பனை, பல்லாயிரக்கணக்கான போதைப்பொருள் குற்ற வழக்குகள் என்பதே ஐந்து ஆண்டு கால திமுக அரசின் சாதனையாக இருப்பதாகவும், அண்டை மாநிலங்களிலிருந்து தினந்தோறும் தமிழகத்திற்குள் கஞ்சா பொட்டலங்கள் மொத்தமாக கடத்தப்படும் நிலையில், அதனைத் தடுக்க அரசு எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவோர், கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் மீது மட்டும் அவ்வப்போது கண்துடைப்பிற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையின் பின்னணியில் உள்ள பெரிய முதலாளிகள் மீது தமிழக போலீசார் நடவடிக்கை எடுக்காததே, போதைப்பொருள் ஒழிப்பில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், போலீசார் பற்றாக்குறை காரணமாகவும் கஞ்சா விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்வதாக சீமான் விமர்சித்துள்ளார். ஒவ்வொரு ஊரிலும் அரசே மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிக்க வைத்துவிட்டு, போதைப்பொருளை ஒழிப்போம் என பேசுவது வெட்கக்கேடானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். போதை ஒழிப்பு குறித்து காணொளி வெளியிடுவதாலோ, ஆண்டுக்கு ஒருமுறை உறுதிமொழி எடுப்பதாலோ பிரச்சினை தீராது என்றும், தமிழக போலீசை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், சீரழிந்து வரும் தமிழ் இளந்தலைமுறையின் எதிர்காலத்தை பாதுகாக்க கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
