சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும், உள்ளூர் மக்களுக்கும் பிழைப்புக்காக வந்த புலம்பெயர் தொழிலாளிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக அரசு உருவாக்கியுள்ளதாகவும் தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மைக்காலமாக தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்கள், அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சென்னை அடையாறில் பணிபுரிந்து வந்த பீஹார் மாநில தொழிலாளி, அவரது மனைவி மற்றும் குழந்தை கொல்லப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசு கல்லூரி கேண்டீனில் வேலை பார்த்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக விஜய் சுட்டிக்காட்டினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக கூறிய அவர், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்காததால் சமூக விரோதிகளுக்கு துணிச்சல் அதிகரிப்பதாக பொதுமக்கள் கருதுவதாக தெரிவித்தார். சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய அரசு மெத்தனப் போக்கில் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என முதல்வர் தொடர்ந்து கூறிவருவது உண்மைக்கு மாறானது என்றும், ஆட்சியின் கடைசி நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினார். மக்கள் பாதுகாப்பற்ற இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுத தமிழக மக்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
