தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகள் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி:
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை, ஆறு வாரங்களுக்குள் கண்டறிய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவ மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி, ‘குமாரி மகா சபா’ அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் இந்த பள்ளிகளைத் தொடங்க மாநில அரசுக்கு அனுமதி வழங்கி 2017ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 2017 டிசம்பர் 11ம் தேதி நடைபெற்ற விசாரணையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது.
இதையடுத்து, பல ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் இருந்த இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வில் கடந்த மாதம் முதல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேற்றைய விசாரணையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என வாதிட்டார். இத்தகைய திட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சி நடைபெறுகிறது என்றும், புதிய கல்விக் கொள்கை பெயரில் ஹிந்தி திணிப்புக்கு முயன்றபோது அதை தமிழக அரசு ஏற்கவில்லை என்பதால், மத்திய கல்வி நிதி நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், மொழி சார்ந்த பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டாம் என்றும், தமிழக மாணவர்களை தேவையற்ற அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர். இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் நாடு என்பதையும் நீதிபதிகள் நினைவூட்டினர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டங்களை திணிப்பாக பார்க்காமல் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் நிலையில், நவோதயா பள்ளிகள் அதற்கு எதிராக இருக்கும் என்ற கருத்து இருந்தால், அதை தனியாக ஆராயலாம் என்றும் தெரிவித்தனர். தற்போதைக்கு பள்ளிகளை கட்ட உத்தரவிடவில்லை என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை மட்டும் ஆறு வாரங்களுக்குள் கண்டறிய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனுடன், 2017ம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கி, வழக்கின் மேலான விசாரணையை ஆறு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
