புதுடில்லி: தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தில் 2024ல் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசியல் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டன. அதன்பின், எல்லை மாநிலங்களில் சட்டவிரோத நுழைவு மற்றும் போலி ஆவணங்கள் தொடர்பான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே, டில்லி போலீஸ் மேற்கு வங்கம் மற்றும் தமிழக அரசுகளுக்கு அறிவுறுத்தல் அனுப்பி, போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவில் தங்கி பணியாற்றுவோரைக் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.
அதன்படி, திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் பின்னலாடை தொழிற்சாலைகளில் ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த பலர் மீது சோதனை நடத்தப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த 103 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில், மிஜனூர் ரகுமான் (33), முகமது ஷபாத் (35), உமர் (32), முகமது லிட்டன் (40), முகமது ஜாகீத் (40), முகமது உஜால் (29) ஆகிய ஆறு பேருக்கு, பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் டில்லியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். அவர்களுக்கும் திருப்பூரில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, தமிழக போலீசாரிடமிருந்து ஆறு பேரையும் டில்லி போலீசார் ஒப்படைப்பு பெற்றனர். கைதான நபர்களிடமிருந்து மொபைல் போன்கள், ஏராளமான சிம் கார்டுகள் மற்றும் போலி இந்திய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த எட்டு பேரிடமும் டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நேரடியாகவோ அல்லது சமூக வலைதளங்கள் வாயிலாகவோ பாகிஸ்தான் சார்ந்த அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்றது குறித்த தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல் சதி குறித்த தகவல்களையும் விசாரணை அமைப்புகள் ஆராய்ந்து வருகின்றன.
