கொழும்பு: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி அதிகாரபூர்வமாக ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றது.
கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார்.
27 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், மொத்தமாக 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இந்திய வீரர் பதிவு செய்த அதிவேக அரைசதம் இதுவாகும். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சால் ஆரம்பத்திலேயே தடுமாறியது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உஸ்மான் கான் 44 ரன்கள் எடுத்து ஓரளவு போராடினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்காததால், பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் பும்ரா, பாண்டியா, அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
போட்டியின் போது இரு அணிகளின் கேப்டன்களும் டாஸ் நிகழ்ச்சியில் கைகுலுக்கவில்லை. போட்டி முடிவில் ஆட்டநாயகனாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
குரூப் ஏ பிரிவில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.
