சென்னை: டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று சென்னை எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின.
லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்திருந்தது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்தப் போட்டி முக்கியமானதாக அமைந்தது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கம் அளித்தனர்.
சஞ்சு சாம்சன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். அவருடன் இணைந்த இஷான் கிஷன் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அபிஷேக் சர்மா அரைசதம் கடந்தார். இஷான் கிஷன் 38 ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். அபிஷேக் சர்மா 55 ரன்கள் எடுத்திருந்தபோது மபோசா பந்தில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின் ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா இணைந்து அதிரடியாக விளையாடினர். ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் அரைசதம் (50 ரன்) அடித்தார். திலக் வர்மா 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்தது.
257 ரன் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் பிரைன் பென்னட் நிலைத்து விளையாடி அரைசதம் கடந்தார். மருமணி 20 ரன்களிலும், டியோன் மியர்ஸ் 6 ரன்களிலும் அவுட் ஆனார்கள். கேப்டன் சிக்கந்தர் ராஸா 31 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.
ரியான் புரி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். டோனி மன்யோங்கா 11 ரன்களிலும், தஷிங்கா முசிகிவா 7 ரன்களிலும் வெளியேறினர்.
20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஜிம்பாப்வே துவக்க வீரர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்திருந்தாலும், அணியின் வெற்றிக்கு அது உதவவில்லை.
