மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை த்ரில் வெற்றியுடன் வீழ்த்திய இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றது.
இலங்கையில் நடைபெற்று வரும் 10வது டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கியமான அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணி மோதின. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இங்கிலாந்து அணியில் ரேஹன் அஹமது நீக்கப்பட்டு ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் அதிரடியாக தொடங்கினார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து வேகமாக ரன்களை சேர்த்தார். அதேசமயம் ஸ்பின்னர் வில் ஜாக்ஸ் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த அபிஷேக், 9 ரன்களில் சிக்சர் அடிக்க முயன்றபோது அவுட்டானார்.
ஒரு கட்டத்தில் ஆர்ச்சர் பந்தை மிட்-ஆன் திசையில் அடித்த சாம்சன் கொடுத்த எளிய கேட்சை ஹாரி புரூக் தவறவிட்டதால் அவர் 15 ரன்களில் அவுட்டாகாமல் தப்பினார். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய சாம்சன் தொடர்ந்து பவுண்டரி, சிக்சர்களை அடித்து வேகமாக ரன்களை குவித்தார்.
பின்னர் சாம்சனுடன் இணைந்த இஷான் கிஷான் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கினார். இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தனர். பவர் பிளே முடிவில் இந்தியா 67/1 என்ற நிலையை எட்டியது. டாசன் பந்தில் சிக்சர் அடித்த சாம்சன் 26 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
இஷான் கிஷான் 39 ரன்களில் அடில் ரஷித் பந்தில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே முக்கிய பங்களிப்பு அளித்தார். ஆர்ச்சர் பந்தில் இரண்டு பெரிய சிக்சர்கள் அடித்த சாம்சன் 89 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா அதிரடியாக விளையாடினர். திலக் வர்மா 21 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் சேர்த்தார். ஷிவம் துபே 43 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். கடைசி ஐந்து ஓவர்களில் இந்தியா 76 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 253/7 என்ற வலுவான ஸ்கோரை பதிவு செய்தது.
பின்னர் 254 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் சற்றே தடுமாறியது. பில் சால்ட் 5 ரன்களில் அவுட்டானார். ஹாரி புரூக் 7 ரன்களில் பும்ரா பந்தில் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஜோஸ் பட்லர் 25 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்தில் அவுட்டானார். டாம் பாண்டன் 17 ரன்களில் அக்சர் படேல் பந்தில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 35 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் அவுட்டானார். சாம் கரண் 18 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார்.
ஆனால் மற்றொரு முனையில் பெத்தேல் அதிரடியாக விளையாடி இங்கிலாந்துக்கு நம்பிக்கை அளித்தார். பல சிக்சர்களை விளாசிய அவர் சதம் அடித்து இந்திய அணிக்கு கடும் சவாலை ஏற்படுத்தினார். இறுதியில் 107 ரன்களில் கடைசி ஓவரில் ரன் அவுட்டானார்.
இங்கிலாந்து அணி கடைசி வரை போராடினாலும் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
