புதுடில்லி: டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில், ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு, அதனை கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார். இதே நேரத்தில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற தனிப்படை நடவடிக்கையில் 42 கிலோ ஹெராயின் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டில்லி விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த ஒருவரின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரது லக்கேஜ்கள் மற்றும் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல பொட்டலங்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டதில், அவை அதிக அளவு மரிஜுவானா போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்த போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பயணியும் கைது செய்யப்பட்டார்.
இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் சோதனையில், அமிர்தசரஸ் பகுதியில் இருந்து 42 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதனுடன் கையெறி குண்டுகள், துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலின் பின்னணி மற்றும் தொடர்புடைய வலையமைப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
