புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். சம்பவத்துக்குப் பிறகு அடில் ரத்தீர், முசுமில் கனி உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட உமர் உன் நபி, குண்டுவெடிப்பு நிகழ்வில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஜமீர் அகமது அஹங்கர் மற்றும் துபைல் அகமது பட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு சதியில் முக்கிய குற்றவாளிக்கு ஆயுதங்கள் வழங்கியதாக இவர்கள்மீது குற்றச்சாட்டு உள்ளது. இவர்கள் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGH) அமைப்புடன் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா போலீசாருடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டிருந்ததும், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சேகரித்ததும் கண்டறியப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
