புதுடில்லி: இந்தாண்டுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு, டில்லி பாரத மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றம், பாதுகாப்பான ஏஐ பயன்பாடு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இம்மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், பின்லாந்து பிரதமர் பெட்ட்டேரி ஓர்போர, மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திரா ராம்கூலம், நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்க வந்த உலக தலைவர்களை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.
பின்னர், பாரத மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தலைவர்கள் பார்வையிட்டனர். தொழில்நுட்பமும் பண்பாட்டும் இணையும் வகையில் நடைபெற்ற நிகழ்வு, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.
