வாஷிங்டன்: எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட, அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என, வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கரோலின் லீவிட் கூறியதாவது:
ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதை நிறுத்துவது மட்டுமல்லாமல், அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒருவேளை வெனிசுலாவிடமிருந்தும் எண்ணெய் வாங்குவதற்கும் இந்தியா உறுதியளித்துள்ளது. இது அமெரிக்காவிற்கும், அமெரிக்க மக்களுக்கும் நேரடிப் பலனைத் தரும்.
எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட, அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். இது மற்றொரு சிறந்த வர்த்தக ஒப்பந்தமாகும்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் – பிரதமர் மோடி இடையிலான நேரடி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்க எரிசக்தி துறையில் இறக்குமதியை அதிகரிக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் நல்ல உறவை கொண்டுள்ளனர். இவ்வாறு கரோலின் லீவிட் கூறியுள்ளார்.
