வாஷிங்டன்: ஈரானிடம் அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில், அந்த நாடு அணுகுண்டு தயாரித்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரபேல் குரோஸி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக தனது நிலைப்பாடு தெளிவாக இருப்பதாக கூறினார். ஈரான் அணுகுண்டு உருவாக்கியதாக உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அணு ஆயுதம் தயாரிக்க தேவையான அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அந்த நாடு அதிக அளவில் வைத்திருப்பது கவலைக்கிடமான விஷயமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஈரானின் அணுசக்தி திட்டங்களை ஆய்வு செய்யும் பணியில் சர்வதேச அணுசக்தி முகமைக்கு போதுமான ஒத்துழைப்பை அந்த நாடு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனால் நிலைமை குறித்து முழுமையான தெளிவை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். பிரச்சினைகளை தீர்க்கவும், அணுசக்தி திட்டம் அமைதிக்கான நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் ஈரான் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை என்றால் ஈரான் அணு ஆயுதப் போருக்கு தயாராகியிருக்கும். மேலும் பல நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஈரான் தலைவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்றும், அவர்கள் கோபத்துடன் செயல்படுகின்றனர் என்றும் கூறிய அவர், அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் அவற்றை பயன்படுத்த தயங்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோவும் ஈரான் குறித்து கடுமையான கருத்துகளை முன்வைத்தார். ஈரானை மத அடிப்படைவாதிகள் வழிநடத்துகின்றனர் என்றும், அவர்களின் இறுதி நோக்கம் அணு ஆயுதங்களைப் பெறுவதாகும் என்றும் அவர் கூறினார். ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் என்ற பெயரில் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மத அடிப்படைவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் சென்றுவிட்டால் உலக அமைதிக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஆனால், இந்த கருத்துக்களுக்கு மாறாக சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரபேல் குரோஸி, ஈரான் அணுகுண்டு தயாரித்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று தனது அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளார்.
