டிரம்பை மகிழ்விக்க நாட்டை நாசப்படுத்துகிறார்கள்; ஈரான் மதகுரு கமேனி கடும் விமர்சனம்
டெஹ்ரான்:
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் அமெரிக்காவின் நலனுக்காகவே நடத்தப்படுகின்றன என குற்றம்சாட்டியுள்ள ஈரான் ஆட்சியாளரும் மதகுருவுமான அயதுல்லா கமேனி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருநாள் தூக்கி எறியப்படுவார் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரான் நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாணயமான ரியாலின் மதிப்பும் கடுமையாக சரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பல நகரங்களில் தீவிரமடைந்துள்ளன.
இந்த போராட்டங்களின் போது, பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் 45 பேர் உயிரிழந்ததாகவும், 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் நிலைமை குறித்து கருத்து தெரிவித்து, “மக்கள் வலுவாக போராடினால், ஈரான் ஆட்சியாளர்கள் நரகத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஈரானின் நிலைமை மிக மோசமாகி வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அயதுல்லா கமேனி, தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
டிரம்ப் திமிர்பிடித்தவர். அவரது கைகள் ஈரானியர்களின் ரத்தத்தால் கறைபட்டுள்ளன. வேறொரு நாட்டின் அதிபரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, சிலர் தங்கள் சொந்த நாட்டின் தெருக்களை நாசப்படுத்துகின்றனர். டிரம்ப் தனது நாட்டில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், போராட்டக்காரர்களை “குண்டர்கள்” மற்றும் “நாசக்காரர்கள்” என விமர்சித்த கமேனி, “அவர்களுக்கு முன் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். 1979ஆம் ஆண்டு புரட்சியில் ஈரானை ஆட்சி செய்தவர்கள் தூக்கி எறியப்பட்டதுபோல, டிரம்ப்பும் ஒருநாள் தூக்கி எறியப்படுவார்” என்று தெரிவித்தார்.
