சென்னை: திமுக எம்பி டிஆர்பாலுவிடம் 3 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தேன். மற்றொரு நாள் குறுக்கு விசாரணை தொடரும். டிஆர்பாலு மீது இன்னொரு புதிய அவதூறு வழக்கு தொடர்வேன் என தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி டிஆர்பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்த பிறகு சென்னை சைதாப்பேட்டையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் என் மீது டிஆர்பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், நேரடியாக இன்று நான் 3 மணி நேரமாக டிஆர்பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்எஸ்பாரதி மீது நான் தொடர்ந்த வழக்கில், இன்று அவர் ஆஜர் ஆகாத காரணத்தினால், வழக்கு மற்றொரு தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
எப்பொழுதும் சொல்வதை தான் இன்றும் சொல்கிறேன். இந்தியாவில் குறைந்தபட்சமான வழக்கில் மட்டும் தான் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வாதிடுவார்கள். எனக்கு திமுக செய்திருக்கும் ஊழல், நாங்கள் வெளியிட்டு இருக்கும் டிஎம்கே பைல்ஸ் பார்ட் 1, 2, திமுக எம்பி டிஆர்பாலு மீது நான் சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்திலும் நம்பிக்கை இருப்பதால், வழக்கறிஞர் பால் கனகராஜ் கொடுத்திருந்த அபிடவிட்டை திரும்ப பெற்று, நானே இந்த வழக்கில் ஒரு சாமானிய மனிதனாக ஆஜராகி வாதிட்டேன். குறுக்கு விசாரணையின் போது மற்றொரு நாளில் விசாரணை வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நான் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் குறித்து, வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது சொல்ல முடியாது. முழுமையாக வழக்கு முடிந்த பிறகு பொதுவெளியில் தெரிவிப்பேன். சேது சமுத்திரம் திட்டம் குறித்து நான் கேட்ட கேள்விகள், அவர் நடத்தும் குடும்ப நிறுவனங்கள், அவர் நீதிமன்றத்திற்கு வந்த கார் எந்த நிறுவனத்தின் பெயரில் உள்ளது, அவர் பெற்ற கடன்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அடுத்த குறுக்கு விசாரணையின் போது மேலும் கேள்விகள் கேட்க உள்ளோம்.
அவர்கள் கேட்ட புதிய தேதியில் மறுபடியும் குறுக்கு விசாரணை நடக்கும். அவருக்கு மார்ச் மாதம் முழுவதும் பார்லிமென்ட் நடைபெற இருப்பதால், பார்லிமென்ட் முடிந்த பின் தேதி கேட்டுள்ளனர். ஏப்ரல் 7ம் தேதி மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த தேதி வழங்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்பாரதி மீது தொடரப்பட்ட வழக்கில் மார்ச் 10ம் தேதி விசாரணை நடைபெறும்.
டிஎம்கே பைலில் நான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து டிஆர்பாலு பதில் அளிக்காமல், அவர் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். என் மனைவி பெயரில் சொத்து வாங்கியதாக கூறினார். நாங்கள் வாங்கியுள்ள அனைத்து சொத்துக்களும் வருமான வரி கட்டி வாங்கியவை குறித்து தெரியுமா என கேட்டேன்; தெரியாது என கூறினார். பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி சொத்து வாங்கிய விவரங்களை டாக்குமெண்டில் பார்த்தீர்களா என கேட்டேன்; தெரியாது என பதிலளித்தார்.
எதுவுமே தெரியாமல் நான் ஊழல் செய்து சொத்து வாங்கியதாக கூறியதால், குறுக்கு விசாரணை நடைபெறும் போது நீதிபதியிடம் பதிவு செய்து, அவர் மீது புதிய அவதூறு வழக்கு தொடர உள்ளோம். இந்த வழக்கை விடப்போவது இல்லை. அவதூறு வழக்கில் நானும், என் மனைவியும் திருமணத்திற்கு பிறகு 15 ஆண்டுகளில் சம்பாதித்த வருமானம், என் மனைவி மும்பை மற்றும் சென்னை நிறுவனங்களில் பணிபுரிந்த போது பெற்ற சம்பளம் உள்ளிட்ட சொத்து விபரங்களை பொதுவெளியில் வெளியிட உள்ளோம். நான் பெற்றுள்ள கடன் விவரங்களையும் வெளியிடுவேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்பி டிஆர்பாலுவிடம் நடத்திய குறுக்கு விசாரணை குறித்து, நிருபர்களிடம் அண்ணாமலை விளக்கம் அளித்தார். இந்த முழு பேட்டியும் தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
