டாஸ்மாக் வருமானமே முக்கியம்: தி.மு.க., அரசு மீது நயினார், அன்புமணி தாக்கு
சென்னை: டாஸ்மாக் வருமானத்தையே முதன்மையாகக் கருதும் தி.மு.க., அரசு, இனிமேல் எந்த சூழலிலும் தமிழகத்தை ஆளக்கூடாது என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என உருக்கமாக வீடியோக்கள் வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 518 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது மிகப்பெரிய நகைமுரண் என தெரிவித்துள்ளார்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், பண்டிகை காலங்களில் மதுவிற்பனை அதிகரிக்கப்படாமல் இருந்ததே இல்லை என்றும், ‘டாஸ்மாக் மாடல் அரசு’ எனும் அடையாளத்தை இந்த அரசு உருவாக்கி விட்டதாகவும் அவர் சாடியுள்ளார். பொங்கலுக்கு 3,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்து, அதே பணத்தை டாஸ்மாக் மூலம் மீண்டும் வசூலிக்கும் அரசின் செயல்பாடு, நகைச்சுவையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பரிசாக வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் எண்ணும், டாஸ்மாக் விற்பனையில் வசூலான நோட்டுகளின் எண்ணும் ஒன்றாக இருப்பதாக செய்திகள் வந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சமூகத்தில் போதையால் ஏற்படும் தீமைகளை தடுப்பதை விட, டாஸ்மாக் வருமானத்தையே பெரிதாகக் கருதும் இந்த அரசு, இனி ஒருமுறையாவது தமிழகத்தை ஆளக் கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அன்புமணி குற்றச்சாட்டு
இதே கருத்தை வலியுறுத்தி, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் தனி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், போகி மற்றும் பொங்கல் ஆகிய இரு நாட்களில் மட்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் 518 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நலனுக்காக துரும்பைக் கூட அசைக்காத தி.மு.க., அரசு, ஆண்டுதோறும் மக்களை மேலும் மேலும் மதுபானங்களுக்கு அடிமையாக்குவதிலேயே வெற்றி பெற்றுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். கடந்த ஆண்டு பொங்கலின்போது 454 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், இந்தாண்டு அதைவிட 14.10 சதவீதம் அதிகமாக விற்பனை நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக இருந்த போதும், மது வணிக வளர்ச்சி அதைவிட அதிகமாக இருப்பது வேதனையளிப்பதாக அன்புமணி கூறியுள்ளார். கடந்த ஆண்டு நான்கு நாட்களில் 725 கோடி ரூபாய் விற்பனை நடந்த நிலையில், இந்தாண்டு நான்கு நாட்களில் மது விற்பனை 900 கோடி ரூபாயைத் தாண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசாக வழங்கப்பட்ட 6,000 கோடி ரூபாயையும் மீண்டும் வசூலிப்பதற்காக தி.மு.க., அரசு திட்டமிட்டு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகக் கூறிய அன்புமணி, மக்கள் விரோத மது ஆதரவு அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
