அம்மான்:
பயங்கரவாதத்திற்கு எதிரான ஜோர்டானின் தெளிவான நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
இரண்டு நாள் அரசுப் பயணமாக ஜோர்டான் சென்றுள்ள பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, ஜோர்டானுக்கான தனது பயணம் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக ஜோர்டான் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும், காசா விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே ஜோர்டான் செயலில் ஈடுபட்டு வருவதை பாராட்டுவதாகவும் கூறினார். இப்பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவும் என அனைவரும் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான ஜோர்டானின் அணுகுமுறை, உலகம் முழுவதற்கும் வலுவான செய்தியை அளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன், பிரதமர் மோடியின் வருகை, இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை பிரதிபலிப்பதாக தெரிவித்தார். இந்தியாவும் ஜோர்டானும் வலுவான கூட்டாண்மை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருவதாகவும், கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் பல துறைகளில் விரிவடைந்துள்ளதாகவும் கூறினார்.
தொழில், விவசாயம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்த கூட்டாண்மை உதவும் எனவும் மன்னர் இரண்டாம் அப்துல்லா தெரிவித்தார்.
