மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அனுபவ வீரரான நோவக் ஜோகோவிச்-ஐ தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், 22 வயதான அல்காரஸ் மற்றும் 38 வயதான ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை 2–6 என்ற கணக்கில் இழந்த அல்காரஸ், அதன் பின்னர் ஜோகோவிச்சை ஆதிக்கம் செலுத்த விடவில்லை.
அடுத்தடுத்த செட்களில் 6–2, 6–3, 7–5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அல்காரஸ், முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம், 22 வயதிலேயே கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய நான்கு தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இது அல்காரஸின் 7-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
அதே நேரத்தில், அனுபவ வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் இதுவரை 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் அவர் வெற்றி பெற்றிருந்தால், ஒட்டுமொத்தமாக 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்திருப்பார். ஆனால், இம்முறை அந்த சாதனை கைநழுவி போனது.
