ஜே.என்.யு. வளாகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக முழக்கம்; புதிய சர்ச்சை
புதுடில்லி: டில்லி கலவர வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் உமர் காலித், சர்ஜில் இமாமுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், Jawaharlal Nehru University (ஜே.என்.யு.) வளாகத்தில், நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜ அரசு 2020ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அதே ஆண்டின் ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் டில்லியில் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த கலவரத்தை தூண்டியதாக, ஜே.என்.யு. முன்னாள் மாணவர்கள் உமர் காலித், சர்ஜில் இமாம் உள்ளிட்ட 15 பேர் மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்கள், ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினர். இதில் உமர் காலித், சர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்த நிலையில், மற்ற குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ஜே.என்.யு. வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் திரண்டனர். அப்போது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ஆவேச முழக்கங்கள் எழுந்தன. இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதுகுறித்து ஜே.என்.யு. மாணவர் சங்க தலைவர் அதிதி மிஸ்ரா கூறுகையில், “2020 ஜனவரி 5 அன்று பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையை கண்டித்து, ஆண்டுதோறும் ஜனவரி 5-ல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் எழுந்த முழக்கங்கள் கொள்கை சார்ந்தவையே; தனிநபரை குறிவைத்து எழுப்பப்படவில்லை” என்றார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, ஜே.என்.யு. நிர்வாகம் டில்லி காவல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதற்கு பதிலளித்த டில்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, “இந்தியா துண்டு துண்டாக உடையும் என முழக்கமிட்டவர்கள் மீதான நடவடிக்கைகள் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இத்தகையவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது வெட்கக்கேடானது; இவ்வாறு செய்பவர்கள் பிரிவினைவாதிகள்” என்று விமர்சித்தார்.
