ஜாதி, செல்வம், மொழி போன்ற அடிப்படைகளால் மக்களை அளவிடக் கூடாது: மோகன் பாகவத்
ராய்பூர்: ஜாதி, செல்வம், மொழி ஆகிய அடிப்படைகளில் மக்களை மதிப்பிடக்கூடாது என, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் நடைபெற்ற ஹிந்து சம்மேளன நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர், நாக்பூரில் ஒரு சிறிய ‘ஷாகா’வாக தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் பணிகள், இன்று நாடு முழுவதும் பரவி இருப்பதாகக் கூறினார். முழு நாடும் அனைவருக்கும் சொந்தமானது என்ற உணர்வே உண்மையான சமூக நல்லிணக்கம் என அவர் வலியுறுத்தினார்.
ஒருவரின் மனதில் உள்ள பாகுபாடு உணர்வுகளை அகற்றி, அனைவரையும் சொந்தமாகக் கருதுவதே நல்லிணக்கத்துக்கான முதல் படி என்றும் தெரிவித்தார். குடும்பங்கள் வாரத்தில் குறைந்தது ஒரு நாளாவது ஒன்றாகச் செலவிட வேண்டும், பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும், வீட்டில் சமைத்த உணவை ஒன்றாகச் சாப்பிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஹிந்துக்கள் எல்லா இடங்களிலும் ஒன்றிணைந்து வருவதாகக் கூறிய மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ் 100 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி இந்த நிகழ்வு நடைபெற்றாலும், நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது முக்கிய நோக்கம் அல்ல என்றும் தெரிவித்தார். அமைப்பின் பணிகள் நாடு முழுவதும் விரிந்துள்ளதே முக்கியம் என அவர் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு முதல் மிசோரம், அந்தமான், சிக்கிம், கட்ச் வரை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்தியா எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் சங்கத்தின் பணியும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அனைத்து ஹிந்துக்களுக்கும் வளங்கள், நீர் ஆதாரங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத நடவடிக்கைகள் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மற்றும் புரிதல் மூலம் சாதிக்க முடிந்தால் அதையே பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்களை ஒன்றிணைப்பதே நோக்கம்; வன்முறைக்கு இடமில்லை என்றும் அவர் கூறினார்.
