திருவனந்தபுரம்: ஜனாதிபதி மாளிகையில் ராஜாஜி சிலை திறக்கப்பட்டதை முன்னிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதி மாளிகையில் ராஜாஜி கவுரவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்தியா குடியரசாக மாறுவதற்கு முன் நாட்டின் ஒரே கவர்னர் ஜெனரலாக இருந்தவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்றும், புதிய ஜனாதிபதி பதவியேற்க தனது பதவியை அவர் வழங்கியதை நினைவுகூர்ந்தார்.
ராஜாஜியின் கொள்கைகள் தன்னை ஆழமாக பாதித்ததாக தெரிவித்த சசி தரூர், தனது மாணவர் பருவத்தில் ராஜாஜி தொடங்கிய சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக இருந்ததாக கூறினார். தாராளமய பொருளாதாரம், சமூக நீதி, சுதந்திரமான அமைப்புகள் ஆகியவற்றில் ராஜாஜி கொண்டிருந்த உறுதியான நிலைப்பாட்டை பாராட்டினார்.
இந்திய நாகரிகம் மற்றும் மதம் குறித்து ராஜாஜி கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை குறிப்பிடத்தக்கது என்றும், அரசியல் அமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீது அவர் கொண்டிருந்த மரியாதையை தாம் இன்று வரை பின்பற்றி வருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில், ராஜாஜியின் கொள்கைகளை தற்போது குறைவானவர்கள் மட்டுமே பின்பற்றுவதை காணும் போது வருத்தம் அளிக்கிறது என்றார்.
முன்னதாக, நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ‘மூதறிஞர்’ சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் மார்பளவு சிலை, ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது. அசோக மண்டபம் அருகே இருந்த எட்வின் லுட்யன்ஸ் சிலை அகற்றப்பட்டு, அதன் இடத்தில் ராஜாஜி சிலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
