நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றிய மூதறிஞர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) அவர்களின் மார்பளவு சிலை, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது.
‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த அறிவிப்பின்படி, ராஜாஜி சிலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
ஜனாதிபதி மாளிகையின் முக்கிய பகுதியாக கருதப்படும் அசோக மண்டபத்தின் கிராண்ட் ஓபன் படிக்கட்டிற்கு அருகே முன்பு பிரிட்டிஷ் கட்டடக்கலை நிபுணர் எட்வின் லுட்யன்ஸ் சிலை இருந்தது. புதிய தலைநகராக டில்லியை வடிவமைத்ததும், ஜனாதிபதி மாளிகையின் கட்டுமானத்திலும் பங்களித்ததும் காரணமாக அவருக்கு அந்த இடம் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, லுட்யன்ஸ் சிலை அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக ராஜாஜி மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்திய வரலாறு மற்றும் ஜனநாயக மரபை பிரதிபலிக்கும் விதமாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் நட்டா, ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத், எல்.முருகன் உள்ளிட்டோர் மற்றும் ராஜாஜி குடும்பத்தினர் பங்கேற்றனர்.
