நமது டில்லி நிருபர்: ஜனாதிபதி திரவுபதி முர்முவை திரிணமுல் காங்கிரஸ் அவமதித்துள்ளது. இது மனதை புண்படுத்தியதுடன் வருத்தத்தையும் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லியில் ரூ.18,300 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டங்களுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் டில்லி மெட்ரோவின் இரண்டு புதிய வழித்தடங்களையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மெட்ரோ விரிவாக்கம் முதல் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கான வீட்டு வசதிகள் வரை பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு வருடத்திற்கு முன்பு டில்லி மக்கள் பாஜகின் இரட்டை இன்ஜின் ஆட்சியை அமைத்தனர்.
பெண் சக்தி
அதன் பலன்கள் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளில் தென்படுகின்றன. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய அத்தியாயம் உருவாக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ரேகா குப்தாவின் தலைமையில் தேசிய தலைநகரில் வளர்ச்சி நடைபெற்று வருகிறது. அரசியல், நிர்வாகம், அறிவியல், விளையாட்டு அல்லது சமூக சேவை என எந்த துறையாக இருந்தாலும் இந்தியாவின் பெண் சக்தி புதிய ஆற்றலுடன் முன்னேறி வருகிறது.
வாழ்த்துக்கள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பெண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேச கட்டியெழுப்பலில் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவர்கள் சமூகத்தையும் நாட்டையும் வலுப்படுத்துவார்கள். நவீன மற்றும் வளர்ந்த டில்லியை உருவாக்க நாங்கள் உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம். உலகில் எவரும் இந்தியா போன்ற பரந்த ஜனநாயகத்தை நினைக்கும் போது, டில்லியின் பிம்பம் அவர்களின் நினைவில் வரும்.
அடையாளம்
டில்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல; அது நாட்டின் அடையாளமாகவும் இந்தியாவின் சின்னமாகவும் விளங்குகிறது. டில்லியின் வளர்ச்சி என்பது ஒரு நகரத்தின் வளர்ச்சி மட்டுமல்ல, அது முழு நாட்டின் முன்னேற்றத்தையும் குறிக்கிறது. டில்லி எவ்வளவு நவீனமாக மாறுகிறதோ, அவ்வளவு இந்தியாவின் நம்பிக்கை உலகிற்கு பிரதிபலிக்கும். இன்று டில்லி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பில் வேகமாக முன்னேறி வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும். அவை டில்லி மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.
அக்கறை
பழங்குடி சமூகத்தின் ஒரு பெரிய விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்திற்குச் சென்றார். அந்த நிகழ்ச்சியையும் ஜனாதிபதியையும் கவுரவிப்பதற்குப் பதிலாக திரிணமுல் காங்கிரஸ் அந்த நிகழ்வை புறக்கணித்தது. ஜனாதிபதி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் பழங்குடி சமூகத்தின் முன்னேற்றத்தில் எப்போதும் அக்கறை காட்டி வருகிறார்.
மனவேதனை
இது ஜனாதிபதிக்கு மட்டுமல்ல, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக மரபுகளுக்கும் அவமானமாகும். இது வேதனையானதுடன் மிகுந்த வருத்தத்தையும் அளிக்கிறது. இது மனதை புண்படுத்தியுள்ளது. இதை நாட்டு மக்கள் மற்றும் டில்லி மக்கள் முன்னிலையில் தெரிவிக்க விரும்புகிறேன். நாடு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் நேரத்தில் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அரசு ஜனாதிபதி திரவுபதி முர்முவை கடுமையாக அவமதித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
