பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், திரவுபதி முர்மு வழங்கிய உரையுடன் தொடங்கிய நிலையில், அந்த உரை விரிவானதும் தொலைநோக்கு பார்வை கொண்டதும் என நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பார்லிமென்ட் மரபுகளில் ஜனாதிபதி உரைக்கு தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் மாதங்களில் நாட்டின் வளர்ச்சி பயணத்திற்கு வழிகாட்டும் அடிப்படையாக இந்த உரை அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களில் இந்தியா அடைந்த முன்னேற்றங்களை இந்த உரை பிரதிபலித்ததுடன், எதிர்காலத்திற்கான தெளிவான திசையையும் காட்டுவதாக மோடி கூறியுள்ளார். வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை மையமாகக் கொண்டு, நாட்டின் கூட்டு லட்சியங்கள் இதில் எடுத்துரைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மக்களுக்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் இந்த உரையில் வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் உறுதி மற்றும் நல்லாட்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
