சென்னையில் பீஹார் குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும், தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்றும், முதல்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
பீஹார் மாநிலம் ஷேக்பூரா மாவட்டத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24), தனது மனைவி முனிதா குமாரி (20) மற்றும் 2 வயது மகன் பிர்மானி குமாரியுடன் வேலை தேடி சென்னை வந்திருந்தார். கடந்த மாதம் 26ஆம் தேதி, அடையாறு இந்திரா நகர் பகுதியில் சாக்கு மூட்டையில் ரத்தக் காயங்களுடன் கவுரவ் குமாரின் உடல் மீட்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அடையாறு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அதே மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் என்ற சத்யேந்தர் (30), லலித் யாதவ் (40) மற்றும் விகாஷ் குமார் (24) ஆகிய மூவரை கைது செய்தனர். விசாரணையில், கவுரவ் குமாருடன் சேர்த்து அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தையும் கொலை செய்யப்பட்டு, உடல்கள் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டதாக தெரியவந்தது.
குழந்தையின் உடல் மத்திய கைலாஷ் ரயில்வே பாலம் அருகே உள்ள பகிங்ஹாம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. முனிதா குமாரியின் உடல், மூன்று நாட்களுக்குப் பிறகு பெருங்குடி குப்பை மேட்டில் இருந்து மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள், முனிதா குமாரியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அவர் எதிர்த்ததால் அவரையும், தடுக்க வந்த கணவரையும், அழுத குழந்தையையும் அடித்து கொலை செய்ததாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, முனிதா குமாரியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், உதவி பேராசிரியர்கள் சிவகுமார் மற்றும் ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கான எந்த தடயங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், தலையில் இரும்புக் கம்பியால் பலத்த தாக்குதல் ஏற்பட்டதால் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கான முதன்மைக் காரணம் என்றும், அந்த விவரம் முதல்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.
