சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை; இடைநிலை ஆசிரியர்கள் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் என்றும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால், தற்போதைய ஆட்சிக் காலம் முடிவடைய உள்ள நிலையிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். இதனை எதிர்த்து, தமிழகத்தின் பல பகுதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் செயல்பட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம், டிசம்பர் 26-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என முன்பே அறிவித்திருந்தது. அதன்படி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு திரண்ட ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர். போராட்டத்தின் போது, அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அப்பகுதியில் இருந்து அகற்றினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்தப் போராட்டத்தின் போது, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
