சென்னையில் நான்காவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்; புகைப்படம் எடுத்த ஆசிரியர்களின் மொபைல் பறிப்பு
சென்னை:
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் நான்காவது நாளாக நேற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது, கைது நடவடிக்கையை புகைப்படம் எடுக்க முயன்ற ஆசிரியர்களின் மொபைல் போன்களை போலீசார் பறித்ததாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர்.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையுடன் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகம், 27-ம் தேதி எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், நேற்று முன்தினம் சென்னை கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
நான்காவது நாளான நேற்று, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தையும், நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தையும் இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட வந்த ஆசிரியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அதேபோல், உழைப்பாளர் சிலை அருகே ஒன்று திரண்ட ஆசிரியர்கள், கோரிக்கை பதாகைகள் ஏந்தியபடி எழிலகத்தை நோக்கி புறப்பட்டனர். இந்த போராட்டத்தில் ஆசிரியர்களின் குழந்தைகளும் பங்கேற்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் காமராஜர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சில ஆசிரியர்களுக்கு லேசான காயமும், மயக்கமும் ஏற்பட்டது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
போலீசாரின் கைது நடவடிக்கையை படம் எடுக்க முயன்ற ஆசிரியர்களின் மொபைல் போன்களை போலீசார் பறித்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதே நேரத்தில், காமராஜர் சாலையில் திடீரென போராட்டம் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. பின்னர், வாகனங்களை போலீசார் மாற்றுப் பாதைகளில் திருப்பி விட்டனர்.
இதற்கிடையே, கடந்த நான்கு நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த இடத்தில் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்பதை முன்கூட்டியே அறிவிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு முன்பே அறிவிப்பதால், போலீசார் திணறடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
