சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் சென்னையில் நேற்று பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டன.
தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில், ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காது கேளாத மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் ‘விசில்’ அடித்தபடி நுாதன போராட்டம் நடத்தினர். உதவித் தொகையை 6,000 ரூபாயாக உயர்த்துதல், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு, அரசு விழிப்புணர்வு பதாகைகளில் சைகை மொழி குறியீடு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 14வது நாளாக மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகங்கள் முன் கருப்பு உடை அணிந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். சென்னை காமராஜர் சாலையில் சமூக நலத்துறை அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு டெய்சி, அமுதா ஆகியோர் தலைமை வகித்தனர்.
பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், ‘டெட்’ தேர்வு மதிப்பெண் குறைப்பு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் கோஷங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு அரசு கல்லுாரிகள் கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சம்பள உயர்வு மற்றும் 12 மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சைதாப்பேட்டையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.
ஆட்டோ மற்றும் கால்டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிண்டி போக்குவரத்து ஆணையரகம் முன் கருப்பு ரிப்பன் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டை அருகே நடந்த காத்திருப்பு போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தால் கிராமங்களில் அடிப்படை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் சார்பில், பணியாளர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பலரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
