சென்னையில் ஆசிரியர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம்
சென்னை:
தி.மு.க., அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையின் பல பகுதிகளில் நேற்று தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பகுதிநேர ஆசிரியர்கள்
பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் கோரி, கடந்த 8ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மூன்றாம் நாளான நேற்று, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி எண் 181-ஐ நினைவூட்டும் வகையில், ஆசிரியர்கள் தங்களின் நெற்றியில் ‘181’ என எழுதி, கண்ணீர் அஞ்சலி செலுத்தி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
இடைநிலை ஆசிரியர்கள்
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் சென்னையின் பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
16ம் நாளான நேற்று, சென்னை எழும்பூர் காந்தி–இர்வின் சாலை மேம்பாலத்தில் குழந்தைகளுடன் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயிலில் எழும்பூருக்கு வந்த இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை அங்கேயே போலீசார் கைது செய்தனர்.
ஊராட்சி செயலர்கள்
தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலர்களையும் இணைக்க வேண்டும், ஓய்வுபெற்ற அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் மாதம் ரூ.15,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் கடந்த 6ம் தேதி முதல் சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஐந்தாவது நாளான நேற்று, எழும்பூர் எல்.ஜி., சாலையில் கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்; பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.
