செனாப் நதி அணை பணிகள் தீவிரம்: பாகிஸ்தானின் நீராதாரம் ஆபத்தில்
புதுடில்லி: ஜம்மு–காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதி குறுக்கே, 3,000 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நான்கு அணைகள் கட்டும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களை 2028க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
1960ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் படி, சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கே ஒதுக்கப்பட்டது. குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்காக மட்டுமே இந்தியா அந்த நீரை பயன்படுத்தலாம் என ஒப்பந்தம் அனுமதித்திருந்தது.
கார்கில் போர், மும்பை தாக்குதல் போன்ற பல்வேறு மோதல்களின்போதும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா கடைப்பிடித்து வந்தது. பாகிஸ்தானின் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற மனிதாபிமான காரணத்தினால், நீண்ட காலமாக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் தலையிடாமல் இருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு ஜம்மு–காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு முதன்முறையாக இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதன் பின்னர், செனாப் உள்ளிட்ட நதிகளின் நீரை தேக்கி பயன்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட தொடங்கின.
இதன் ஒரு பகுதியாக, செனாப் நதியில்
பாஹல் துல் அணை – 1,000 மெகாவாட்
கிரு அணை – 624 மெகாவாட்
குவார் அணை – 540 மெகாவாட்
ரத்லே அணை – 850 மெகாவாட்
ஆகிய நான்கு நீர்மின் திட்டங்கள் அமலில் உள்ளன. இதில் பாஹல் துல், கிரு, குவார் அணைகள் ஜம்மு–காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைக்கப்படுகின்றன.
மத்திய மின் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் சமீபத்தில் இந்த திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, பாஹல் துல் மற்றும் கிரு திட்டங்களை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னரும், குவார் திட்டத்தை 2028க்குள்ளும் முடிக்க உத்தரவிட்டுள்ளார். ரத்லே அணை பணிகளையும் விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அணைகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், ஜம்மு–காஷ்மீரின் மின் தேவைகள் பெருமளவில் பூர்த்தியாகும். அதே நேரத்தில், பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரின் அளவும், நேரமும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலை உருவாகும்.
இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் எம்.பி. ஷெர்ரி ரஹ்மான், “இது சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் வெளிப்படையான மீறல். நீரை ஆயுதமாக்கும் முயற்சியை ஏற்க முடியாது; இது பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும்” என குற்றம்சாட்டினார்.
