புதுடில்லி: தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன். மாணிக்கவேலை, சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்கள், விசாரணை அறிக்கைகள் உள்ளிட்டவற்றை துறை சார்ந்த உயர் அதிகாரியிடம் பொன். மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்காமல் காலதாமதம் செய்ததாக கூறி, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிமன்றம், 2019-ம் ஆண்டு டிசம்பரில், ஒரு வாரத்துக்குள் அனைத்து ஆவணங்களையும் துறை சார்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை இரு தரப்பும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அமர்வு தெரிவித்தது. இதையடுத்து, வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரிக்க பெரிதாக எதுவும் இல்லை என்பதால், அடுத்த விசாரணையோடு வழக்கை முடித்து விடலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
