புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு அவசர ஏற்பாடாக ‘எஸ்மா’ எனப்படும் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.
மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் உலகளவில் பெட்ரோலிய பொருட்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை சமீபத்தில் ரூ.60 உயர்த்தப்பட்டது. மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. இதுகுறித்து பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எண்ணெய் விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ‘எஸ்மா’ எனப்படும் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவுகளில் எந்த துறைகளுக்கு முதன்மையாக விநியோகம் வழங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி பொதுமக்கள் பயன்படுத்தும் வீட்டு சமையல் சிலிண்டர்கள், வீடுகளுக்கு குழாய் வழியாக வழங்கப்படும் பி.என்.ஜி. இயற்கை எரிவாயு மற்றும் போக்குவரத்திற்கான சி.என்.ஜி. எரிவாயு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வீட்டு சமையல் சிலிண்டர் உற்பத்திக்கு சுத்திகரிப்பு நிலையங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது முன்னுரிமையாக உர ஆலைகளுக்கு எரிவாயு விநியோகம் வழங்கப்பட வேண்டும். கடந்த ஆறு மாத சராசரி நுகர்வின் அடிப்படையில் 70 சதவீத அளவில் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக தேயிலை தொழிற்சாலைகள், உற்பத்தி அலகுகள் மற்றும் பிற தொழிற்சாலை நுகர்வோருக்கு கடந்த ஆறு மாத சராசரி எரிவாயு பயன்பாட்டின் 80 சதவீத அளவில் விநியோகம் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக வணிக பயன்பாட்டுக்கான நுகர்வோருக்கு கடந்த ஆறு மாத சராசரி எரிவாயு நுகர்வில் 80 சதவீதத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்வதற்காக 1955 ஆம் ஆண்டு ‘எஸ்மா’ எனப்படும் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் கள்ளச்சந்தையில் பொருட்களை பதுக்குவது, விற்பது மற்றும் செயற்கையாக தட்டுப்பாடுகளை உருவாக்குவது போன்றவற்றை தடுக்கிறது.
மேலும் கள்ளச்சந்தையில் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அசாதாரண சூழ்நிலைகளில் மக்களின் நலனை பாதுகாக்கவும், பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.
