சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முடிவடைந்ததை தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் 5.67 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 12.21 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர்.
தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த தகவலின்படி, 2025 டிசம்பர் 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் நடந்த சிறப்பு முகாம்களில் 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். தகுதி இல்லாத 4.23 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இறுதி பட்டியலின்படி, ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.90 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். 18–19 வயதுடைய இளம் வாக்காளர்கள் 12.5 லட்சம் பேர், மாற்றுத்திறனாளிகள் 4.53 லட்சம் பேர், 85 வயதுக்கு மேற்பட்டோர் 3.99 லட்சம் பேர் என கணக்கிடப்பட்டுள்ளது.
மாநிலத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொடர்கிறது. இங்கு 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் உள்ளது; இங்கு 1.16 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் https://elections.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று முதல் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் தொடரும். தேவையான படிவங்களை பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி அலுவலரிடம் நேரடியாக வழங்கலாம். இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டரிடம் முறையிடலாம். அதில் அதிருப்தி இருந்தால் 30 நாட்களுக்குள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம்.
மேலும், சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் தமிழகம் வரவுள்ளனர். பல்வேறு ஏஜன்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
குறிப்பாக, சிறப்பு திருத்தப் பணியின் போது 74.07 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
