புதுடில்லி: மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய கே.வி. சுப்பிரமணியனுக்கு, அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் “சிறந்த முன்னாள் மாணவருக்கான தொழில்முறை சாதனையாளர்” விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
கே.வி. சுப்பிரமணியன் 2018 முதல் 2021 வரை மத்திய அரசின் 17வது தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார். பொருளாதார கொள்கைகள் மற்றும் ஆய்வுகள் தொடர்பாக முக்கிய பங்காற்றிய அவர், தனது பதவிக்காலத்தில் மூன்று முக்கிய பொருளாதார ஆய்வறிக்கைகளை தயாரித்துள்ளார். மேலும் சர்வதேச நாணய நிதியம் (IMF) அமைப்பிலும் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
தற்போது அவர் ஹைதராபாத்தில் செயல்படும் ஒரு பொருளாதாரக் கல்வி நிறுவனத்தில் நிதித் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதோடு ‘India@100’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.
சிகாகோ பல்கலைக்கழகம் கடந்த 1941ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 85 ஆண்டுகளாக சிறந்த முன்னாள் மாணவருக்கான தொழில்முறை சாதனையாளர் விருதை வழங்கி வருகிறது. இந்த விருதை இதுவரை எந்த இந்தியரும் பெறாத நிலையில், முதல்முறையாக கே.வி. சுப்பிரமணியன் இந்த பெருமையை பெற்றுள்ளார்.
மேலும் இந்த விருதை கடந்த காலங்களில் பெற்றவர்களில் 14 பேர் நோபல் பரிசு பெற்றவர்களாகும். அந்த வரிசையில் தற்போது கே.வி. சுப்பிரமணியனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இந்த விருதை பெற்றவர்கள் பெரும்பாலும் மேற்கத்திய நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் இந்தியாவில் இருந்து இந்தியாவுக்காக செய்த சேவையை கருத்தில் கொண்டு கே.வி. சுப்பிரமணியனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விருது குறித்து கே.வி. சுப்பிரமணியன் கூறுகையில், இது மிகுந்த பெருமை அளிக்கும் அங்கீகாரம் என்றும், இந்தியாவில் இந்தியாவுக்காக செய்த பணிக்கு கிடைத்த மரியாதை என்றும் தெரிவித்தார். இந்திய விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களான சி.வி. ராமன், ஹோமி பாபா, விக்ரம் சாராபாய், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் பாதையை பின்பற்றுவது தமக்கு பெரும் பாக்கியம் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐஎம் கொல்கத்தா போன்ற கல்வி நிறுவனங்களும் கே.வி. சுப்பிரமணியனுக்கு சிறந்த முன்னாள் மாணவருக்கான தொழில்முறை சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளன.
