புதுடில்லி: கோவாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநில மக்கள் வளர்ச்சிக்கும் சிறந்த நிர்வாகத்துக்கும் துணை நிற்பதை இது காட்டுகிறது என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், சமீபத்தில் கோவா ஜில்லா பரிஷத்துகளுக்கான தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. வடக்கு கோவாவில் பாஜ 13 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றின. தெற்கு கோவாவில் பாஜ 10 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும் வெற்றி பெற்றது. மீதமுள்ள இடங்களில் பிராந்திய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், சிறந்த நிர்வாகத்துக்கும் வளர்ச்சி அரசியலுக்கும் கோவா மக்கள் துணை நிற்பதாக கூறினார். பாஜ கூட்டணிக்கு ஆதரவு அளித்த கோவா சகோதரர், சகோதரிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்த வெற்றி கோவாவின் வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் என்றும், இந்த அற்புதமான மாநில மக்களின் கனவுகள் மற்றும் லட்சியங்களை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கடினமாக உழைத்த பாஜ கூட்டணி தொண்டர்கள் களத்தில் பாராட்டுக்குரிய பணிகளை செய்ததே இந்த வெற்றிக்கு காரணம் என்றும் பிரதமர் மோடி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
