சவுக்கு சங்கர் கைது – மார்கண்டேய கட்ஜூ கண்டனம்
புதுடில்லி:
விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாமல், சவுக்கு சங்கர் மீது அப்பட்டமாக புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி, மிரட்டி பணம் பறித்ததாக போலீசார் கைது செய்துள்ளதாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
கைது:
கடந்த டிசம்பர் 13ம் தேதி, மதுபான ‘பார்’ உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், ‘யூடியூபர்’ சவுக்கு சங்கரை அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கைது நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊழல்:
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, மார்கண்டேய கட்ஜூ எழுதிய கட்டுரையில், இந்தியாவில் ஊழல் பரவலாக இருந்தாலும், சமீப காலங்களில் தமிழகம் அதில் முன்னணியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஊழல் இல்லாமல் எதுவும் நடைபெறாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாகவும், நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியால் நிர்வகிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், தமிழகம் பொற்காலத்தை அனுபவித்ததாகவும், இந்தியாவின் சிறந்த மாநிலமாக முன்னாள் பிரதமர் நேருவால் புகழப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார். ஆனால், தற்போது அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலை நிலவுகிறது என்றும், நேர்மைக்கு அடையாளமாக காமராஜர் திகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாசிச ஆட்சி:
தங்களின் ஊழல் மற்றும் தவறுகளை எதிர்த்து வரும் விமர்சனங்களை ஏற்க மறுக்கும் ஆளும் திமுக அரசு, மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்காக பாசிச ஆட்சியை செயல்படுத்தி வருவதாகவும், மாநிலத்தில் பயமூட்டும் சூழலை உருவாக்கி இருப்பதாகவும் கட்ஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
கண்டனம்:
சவுக்கு சங்கர் கைது நடவடிக்கைக்கு எதிராக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர். தங்களுக்கு சாதகமாக இல்லாத பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுவதாகவும், சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தினார்.
நயினார் நாகேந்திரனும் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, திமுக அரசை பாசிச அரசு என விமர்சித்ததுடன், கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி கார்த்தியும், சவுக்கு சங்கரின் கருத்துகளுடன் ஒத்துப்போகாவிட்டாலும், அவரை கைது செய்தது அப்பட்டமான துன்புறுத்தல் என விமர்சனம் செய்துள்ளார்.
பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணனும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அரசுகளால் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும், அரசை விமர்சித்ததற்காகவே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வேண்டுகோள்:
இந்த இழிவான மற்றும் கண்டிக்கத்தக்க செயலை எதிர்த்து, சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்தியாவின் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் மார்கண்டேய கட்ஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
