காத்மாண்டு: நேபாளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்திற்கே காரணமாக அமைந்த சமூக ஊடக மசோதாவை திரும்பப் பெறுவதாக நேபாளம் அரசு அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் கண்காணிப்பு தொடர்பான புதிய விதிமுறைகளை கொண்டு வருவதற்காக, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது.
இந்த மசோதா அறிமுகத்திற்கு முன்னதாகவே, அங்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து, நாட்டில் இளைஞர்கள் தலைமையில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன.
இந்த தொடர் போராட்டங்களின் பின்னணியில், கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டில் அரசியல் மாற்றத்துக்கு வழிவகுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த சமூக ஊடக மசோதாவை, பார்லிமென்டில் இருந்து முழுமையாக திரும்பப் பெறுவதாக நேபாள அரசு தற்போது அறிவித்துள்ளது.
