சம வேலைக்கு சம ஊதியம் கோரி 7வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு தினத்திலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எழிலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு, காந்தி–இர்வின் சாலை மேம்பாலத்தில் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் சாலையில் மண்டியிட்டும், தோப்புக்கரணம் போட்டும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்த நடவடிக்கையில் பலருக்கு காயமும், சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ராபர்ட் கூறுகையில், “எங்களுக்கான ஊதிய முரண்பாடு களையப்படும் நாள்தான் எங்களுக்கான புத்தாண்டு. கோரிக்கை நிறைவேறாமல் நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம். அரசு ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்தை பறிப்பதால், எதிர்காலத்தில் தகுதியான ஆசிரியர்கள் இந்த பணிக்கு வர தயங்குவார்கள். இதனால் அரசு பள்ளி மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்” என தெரிவித்தார். மேலும், பல நாட்களாக போராட்டம் நடத்திய போதும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் மவுனம் காக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்தில், போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசாமல் கைது செய்வதும் வழக்கு போடுவதும் சரியானதல்ல என தெரிவித்துள்ளார். புத்தாண்டு நாளில் கூட சொந்த ஊர் செல்லாமல் போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை அரசு உணர வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் முதல்வரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
