ஆமதாபாத்: குஜராத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் ஹனுமன் உருவப்படம் பொறித்த பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.
இரண்டு நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இன்று இந்தியா வந்தடைந்தார். தனது இந்திய சுற்றுப்பயணத்தை அவர் ஆமதாபாத்தில் தொடங்கினார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். பின்னர் இருவரும் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று, மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். வரலாற்று சிறப்புமிக்க ஆசிரமத்தில் இரு தலைவர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சர்வதேச பட்டம் விடும் விழாவைத் தொடங்கி வைக்க சபர்மதி ஆற்றங்கரைக்கு சென்ற இரு தலைவர்களும், அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, பிரதமர் மோடியும் ஜெர்மனி அதிபரும் ஹனுமன் உருவப்படம் பொறித்த பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து, காந்தி நகரில் பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் இடையிலான இருநாட்டு உறவுகள் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளது. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், சர்வதேச அளவில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
