சன்சாத் கேல் மஹோத்சவ் நிறைவு விழாவில் கோவை மாணவி நேசிகாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
‘சன்சாத் கேல் மஹோத்சவ்’ விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்று நாடு முழுவதும் பல மையங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டில்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். விளையாட்டை குழந்தைகளின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பேச்சின்போது, விளையாட்டு என்பது கல்வியுடன் இணைந்த ஒரு முக்கிய அம்சம் மட்டுமல்ல; உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கும் அவசியமானது என்று கூறினார். விளையாட்டு வீரர்கள் தங்களின் தனிப்பட்ட வெற்றிக்காக மட்டும் அல்ல, நாட்டின் பெருமைக்காகவும் விளையாடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியின் போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
கோவை மாணவியின் உரையாடல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த கபடி வீராங்கனை நேசிகா, பிரதமர் மோடியுடன் உரையாடினார்.
அப்போது, தனது விளையாட்டு பயிற்சிகள் கல்விக்கு பாதிப்பாக இல்லை என்றும், பள்ளி முடிந்த பிறகு தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொள்வதாகவும் நேசிகா தெரிவித்தார். மாநில விளையாட்டு என்பதால் கபடியை அதிகம் விரும்புவதாக கூறிய அவர், மேட்டுப்பாளையத்தில் இந்த விழா நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்தார்.
நேசிகா யார்?
மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் நேசிகா, தேசிய அளவில் சைக்கிளிங் போட்டிகளிலும், மாநில அளவில் கபடி போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிகள் பெற்றவர். இன்றைய விழாவில் பிரதமருடன் நேரடியாக உரையாடிய மாணவியாவார்.
உரையாடலின் போது, நீங்கள் பங்கேற்கும் இரண்டு விளையாட்டுகளில் எது உங்களுக்கு அதிகம் பிடிக்கும் என பிரதமர் கேட்டதற்கு, கபடியே தனது விருப்பமான விளையாட்டு என நேசிகா பதிலளித்தார். மேலும், ‘சன்சாத் கேல் மஹோத்சவ்’ போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டின் அவசியம்
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மீண்டும் உரையாற்றுகையில், பெற்றோர் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும் என்றும், விளையாட்டு உடல் வலிமையுடன் மன உறுதியையும் வளர்க்கும் என்றும் கூறினார். விளையாட்டு வீரர்கள் நாட்டின் வெற்றிக்காக உழைக்கிறார்கள் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.
விழாவில் உரைகள்
விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 240 பார்லிமென்ட் தொகுதிகளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதாகவும், தமிழகத்தில் தனது தொகுதியில் நடைபெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். 2047ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும் என்றும், பொருளாதார வளர்ச்சியில் இந்தியா தற்போது நான்காவது இடத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2030ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுகளில் தமிழக வீரர்கள் சிறப்பாக பங்கேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா பேசுகையில், பதக்கம் பெறுவது மகிழ்ச்சி அளிப்பதுதான்; ஆனால் ஒழுக்கம், உறுதி, தன்னம்பிக்கை ஆகியவையே உண்மையான வெற்றி என கூறினார். தினசரி பயிற்சியும், முயற்சியும் வீரர்களின் உள்ளார்ந்த வலிமையை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மீண்டும் முயற்சி செய்யுங்கள்
பதக்கங்கள் இலக்குகள் அல்ல; அவை அடையாளங்கள் மட்டுமே என்று குறிப்பிட்ட பி.டி.உஷா, தோல்வியை ஏற்றுக்கொண்டு மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்றும், கனவுகளை கைவிடக்கூடாது என்றும் கூறினார். இந்தியா விளையாட்டிலும் தன்னம்பிக்கையிலும் உயர்ந்து வருகிறது என்றார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பேசுகையில், இந்தியா உலகளவில் போட்டியிடும் நாடாக வளர்ந்து வருவதாகவும், இதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
